;
Athirady Tamil News

வேட்பு மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றம் செல்லும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

0

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு நிராகரிப்புக்கள் தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் என நாடு முழுவதும் 250 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எம்மை பொறுத்தவரையில் ஒரே காரணத்தின் அடிப்படையிலேயே 09 நிராகரிக்கப்பட்டுள்ளதாக கையளிக்கப்பட்டுள்ளன.

இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையிலான அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையே நிராகரிப்புக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் நாங்கள் சகல சபைகளிலும் தேவையான இளைஞர்களுக்கான அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்.

உரிய இடத்தில் உரிய உறுதிப்படுத்தல்களுடன் பெற்றுக்கொண்ட பிறப்பு சான்றிதழ்களுக்கான போட்டோ பிரதிகள் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

மூலப்பிரதிகள் வழங்கப்பட வேண்டும் என எங்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.

எம்மை பொறுத்தவரையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்தின் நோக்கம் குறித்த நபர்கள் இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். இந்த விடயத்தை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பிரதி வழங்குகிறோம். இவற்றை வைத்து குறித்த நபர் இளைஞரா இல்லையா என முடிவு செய்ய முடியும்.

இந்த நிலையில் குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தவறான ஒன்று.

இது தொடர்பாக நாம் ஏற்கனவே சட்டத்தரணியுடன் பேசியிருக்கிறோம். எதிர்வரும் திங்கட்கிழமை இது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை பிறப்பு சான்றிதழை உறுதிபடுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக வல்வெட்டித்துறையில் சுயேற்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதி எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறித்த சுயேற்சைக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.