;
Athirady Tamil News

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

0

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத் தீ உருவாகி அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வரும் நிலையில் நேற்று (மார்ச் 22) மாலை 3 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) 65 சதவிகித நெருப்பு அணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 22) மாலை சூரியன் மறைவதற்கு முன்னால் தேவையான அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படைகளுக்கு தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் (மார்ச் 21) காட்டுத் தீ ஏற்பட்டவுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த 213 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள ஆராய்ச்சி மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதில், காட்டுத் தீயினால் உண்டான புகையை சுவாசித்ததினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீயை முழுவதுமாக அணைத்த பின்னர் அது உண்டானதற்கான காரணம் குறித்த விசாரணையை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.