;
Athirady Tamil News

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

0

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எஃப்.) கட்டுப்பாட்டிலிருந்து அந்நாட்டு அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாக நேற்று முன்தினம் (மார்ச் 21) அறிவித்திருந்தது.

இந்நிலையில், தலைநகர் கார்டூமிலுள்ள சூடானின் மத்திய வங்கியின் தலைமைச் செயலகம், முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மீட்டு கைப்பற்றியதாகவும் இதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நேற்று (மார்ச் 22) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சூடானின் ராணுவப் படைகளின் செய்தித் தொடர்பாளர் நபில் அப்தல்லா கூறுகையில், சூடான் ராணுவம் மத்திய கார்டூமிலுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமைச் செயலகம் மற்றும் கோரிந்தியா விடுதியிலிருந்து துணை ராணுவப்படையை வெளியேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து துணை ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் சூடானின் ராணுவப் படை மற்றும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த போரின் துவக்கத்தில் துணை ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் ராணுவ தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை ஆக்கிரமித்தது. மேலும், அங்குள்ள மக்களின் வீடுகளையும் ஆக்கிரமித்து அதனை எதிராளிகளை தாக்கும் தளமாக பயன்படுத்தி வந்துள்ளது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக இந்த போரில் முன்னிலை பெற்று வரும் சூடான் ராணுவம் தலைநகர் கார்டூம் மற்றும் ஒம்துமன், வடக்கு கார்டூம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய நகரங்களை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.