வறுமை காரணமாக 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்ற மூதாட்டி

ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை அடையாளம் தெரியாத தம்பதியிடம் ரூ.200 க்கு விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தம்பதியினர் மூதாட்டியிடம், பேரனுக்கு உணவு, தங்குமிடம், படிப்பு ஆகியவை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி அந்த மூதாட்டி சிறுவனை விற்றது தெரியவந்துள்ளது.
தற்போது, இந்த சிறுவன் காவல்துறையினரால் மீட்கப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “65 வயதான மூதாட்டிக்கு வீடு இல்லை. மகன் காணாமல் போய்விட்டார். மருமகள் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார்.
இதனால், தனது பேரனை அழைத்துக் கொண்டு ராய்பால் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், அவரது சகோதரியின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால் பேரனுடன் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அந்த நேரத்தில் தான் அடையாளம் தெரியாத தம்பதியிடம் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த விடயம் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினருக்கு தெரியவரவே காவல்துறையினரால் சிறுவன் மீட்கப்பட்டார்” என்றார்.