மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார் போப்!

ரோம் : கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் நேற்று (மார்ச் 23) வாடிகன் திரும்பினார். வாடிகனிலுள்ள தமது வீட்டுக்குச் செல்லும் போப் அங்கு தொடர்ந்து ஓய்வெடுப்பார் என்று வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் வாடிகன் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி, போப் பிரான்சிஸ் இரவில் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூச்சு விடுவதாகவும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து வாடிகனுக்கு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்தனர்.
இந்த நிலையில், ஜெமெலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலிருந்தபடி, ஜன்னல் வழியாக அவர் மக்களை நோக்கி கையசைத்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த போப் பிரான்சிஸைக் காண மருத்துவமனை வெளியே ஏராளமானோர் திரண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் வாடிகன் அழைத்துச் செல்லப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.