ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஜேர்மனி

ரகசியமாக ரஷ்யாவிற்கு வேலை செய்யும் எண்ணெய் கப்பலை ஜேர்மனி கைப்பற்றியுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி செயல்படும் Shadow Fleet என அழைக்கப்படும் ரகசிய எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Eventin-ஐ கைப்பற்றியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.
40 மில்லியன் யூரோ மதிப்புள்ள கச்சா எண்ணெயுடன் சென்ற இந்த கப்பல், கடந்த ஜனவரியில் இயந்திரக் கோளாறு காரணமாக பால்டிக் கடலில் Ruegen தீவின் அருகே நிறுத்தப்பட்ட நிலையில் இருந்தது.
ஜேர்மனியின் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த கப்பலை கைப்பற்றியதாக Der Spiegel செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்த மறுத்து, சட்டபூர்வ நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்று தெரிவித்தனர்.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ரஷ்யா மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை தவிர்க்க இந்த வகை கப்பல்களை பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான யுத்தத்திற்குப் பணம் திரட்டுவதாக குற்றம் சாட்டினார்.
பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதன்படி, ரஷ்யா இதுபோன்ற நூற்றுக்கணக்கான பழைய மற்றும் பாதுகாப்பற்ற கப்பல்களை எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கப்பல் ஊழியர்கள் அனுபவமற்றவர்கள், மேலும் போதுமான காப்பீடு இல்லாமல் பயணம் செய்வதால், கடல் சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு மற்றும் எண்ணெய் கசிவு அபாயம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.