;
Athirady Tamil News

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

0

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள்ளை சூரஜ். இவர் சிபிஎம் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்ததற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சிபிஎம் கட்சியினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூரஜ் கொலை வழக்கில் சிபிஎம் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.டி. நிசார் அகமது இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் டிபி சந்திரசேகரன் என்பவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிகே ரஜீஷ் (45), முதல்வரின் செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பிஎம் மனோஜின் சகோதரர் மனோஜ் நாராயணன், ஈவி யோகேஷ் (45), ஷம்ஜித் (48), நெய்யோத் சஜீவன் (56), பிரபாகரன் (65), பத்மநாபன் (67), ராதாகிருஷ்ணன் (60), புதியபுரையில் பிரதீபன் (59) ஆகிய 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

10-வது குற்றவாளியான நாகாத்தன் கோட்டை பிரகாஷன் (56) முக்கிய சாட்சியாக மாறியதால் விடுதலை செய்யப்பட்டார். 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் முதலில் 10 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். பின்னர், டிகே ரஜீஷ் வாக்குமூலத்தின்படி மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில், பிகே சம்சுதீன், டிபி ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர்.

கொலை நடந்தபோது சூரஜ் மீது முதலில் வெடிகுண்டை வீசிய குற்றவாளிகள் பின்னர் கோடாரி, கத்திகளால் அவரைத் தாக்கியதாக சிறப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

மேலும், கொலைக்கு 6 மாதங்களுக்கு முன்னரே சூரஜை கொலை செய்ய இவர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது நடைபெற்ற தாக்குதலில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சூரஜ் படுக்கையில் இருந்தார். பின்னர் குணமாகி மீண்டு வந்த அவரை மீண்டும் தாக்கி கொலை செய்துள்ளனர்.

”சூரஜ் கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்த பின்னர் அவரது கல்லறையைக் கூட குற்றவாளிகள் இருமுறை இடித்தனர். இவர்களுக்கான தண்டனை சூரஜின் பெற்றோரின் வேதனையை சற்றே தணிக்கும்” என்று வழக்குரைஞர் பத்மராஜன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.