தென் கொரியா பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்

சியோல்: தென் கொரிய பிரதமா் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
இது தொடா்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் பதவி நீக்கத்தை எதிா்த்து ஏழு நீதிபதிகளும் ஆதரித்து ஒரு நீதிபதியும் வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபா் யூன் சுக் இயோலுக்கு பதிலாக நாட்டின் இடைக்கால அதிபராக ஹன் டக்-சூ மீண்டும் நியமிகப்பட்டாா்.
தென் கொரியாவில் சட்டவிரோதமாக அவசரநிலையை அறிவித்ததாக யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்துள்ளது. அவருக்குப் பதிலாக, பிரதமா் ஹன்-டக் சூ இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டாா். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றம் பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றியிருந்தது.
தற்போது ஹன் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டதை அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்தாலும், அதிபா் யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை ரத்து செய்வதா அல்லது அவரை பதவியில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை.