;
Athirady Tamil News

தெலங்கானா சுரங்கத்தில் மற்றொருவர் உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் பணி!

0

தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து, அந்த உடலை மீட்பதற்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கடந்த மார்ச் 9ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் லோடேட்டி தலைமையில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மற்றொரு உடல் காணப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் காணப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உடல் மீட்கப்பட்ட பிறகு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மேலும், 6 தொழிலாளர்களின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்பட மத்திய, மாநிலங்களைச் சேர்ந்த 25 நிறுவனங்களின் 700 பேர் மீட்புப் பணியில் ஒரு மாதத்துக்கு மேலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ. 25 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.