புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கான போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 11.04.2025ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களிற்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(25.03.2025) செவ்வாய்க்கிழமை காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், இந்து கலாச்சார உத்தியோகத்தர், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், இலங்கை போக்குவரத்து சபையினர், தனியார் போக்குவரத்து சபையினர், ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இரண்டு தனியார் போக்குவரத்து சபையினரின் பேருந்துகளுக்கு ஒரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை சேவையில் ஈடுபடுத்துவது என்ற தீர்மானம் எட்டப்பட்டது.
கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மட்டும் பரந்தன் சந்தியில் ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றி இறக்க முடியும். ஏனையவர்கள் தரித்து நிற்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பரந்தன் மற்றும் ஆலய வளாகத்தில் குறித்த பேருந்து சேவைகளை கண்காணிப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் காவலரன்களை நிறுவுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் இவை தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதுடன், இரண்டு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பை சரியாக பேணவேண்டும்.
குறித்த தீர்மானங்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சகலருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாத மற்றும் பாதை வழித்தடம் சரியாகப் பின்பற்றப்படாதவர்களின் பாதை வழித்தட உரிமத்தினை வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று இடை நிறுத்துவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.