யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை இனிவரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்துவேன் என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் , கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தர்க்கத்தை தொடர்ந்து இடையில் நிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஆராயும் கூட்டமே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்
ஆனால் இன்றைக்கு மிக வேதனைக்கு உரிய விடயம் என்ன என்றால் , அபிவிருத்தி தொடர்பில் பேச வேண்டிய இந்த கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்தது போல சில விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாது என கூறி வெளியேறி சென்றுள்ளார். அதேபோல கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு மனவுளைச்சலும் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஒரு சில விடயங்களையே என்னால் கட்டுப்படுத்த முடியும். சில விடயங்களை கட்டுப்படுத்த முடியாது. யாருடைய சொற்களையும் , பேச்சுக்களையும் செவிமடுக்க முடியாத நபர்களின் செயற்பாட்டால் கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்ட போதிலும் , மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்
எவரையும் பகைத்துக்கொண்டோ , புறக்கணித்துக்கொண்டோ கூட்டத்தை நடாத்த கூடாது என நினைக்கிறேன். ஆனால் நிலைமை மோசமானால் எனக்கு உரிய அதிகாரங்களை கையில் எடுப்பேன், இனிவரும் கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன்.