;
Athirady Tamil News

அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்க தலைவர் அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து மகஜர் கையளிப்பு

0

அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்க தலைவர் அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த மகஜரில், வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் பதில் அதிபர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக,
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளில் கடமை நிமித்தம் கடமைப்புரியும் பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் நம் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய மற்றும் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்னவையும் சந்நித்து கலந்துரையாடியுள்ளோம்.

அக் கலந்துரையாடலின் போது பிரதமருக்கு வழங்கிய கடிதத்தின் பிரதியை தங்களுக்கும் அனுப்பியிருந்தோம்.

அச் சந்திப்பில் வட மாகாணத்தில் உள்ள அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உங்களோடும், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் வட மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோருடனும் கலந்துரையாடுமாறும் ஆலோசனை வழங்கினார்.

வட மாகாணத்தில் முக்கியமாக எமது பதில் அதிபர்கள் எதிர் நோக்கும் பின்வரும் இரண்டு பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டியதாகும்.

கடந்த காலங்களில் புதிய தர அதிபர்கள் நியமன விடயத்தில் வட மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில், மூன்று வருடங்களுக்கு மேற்பட்டு சேவையை வழங்கிய அதிபர்கள் பாடசாலைகளில் இருந்து அகற்றப்படவில்லை. வட மாகாணத்தில் மாத்திரம் சேவையில் இருந்த அதிபர்களிடமிருந்து நிர்வாக பொறுப்பை பலவந்தமாக பெற்று புதியவர்களை நியமித்துள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பதில் அதிபர்கள் மனோ நிலையில் மிகுந்த பாதிப்பை எதிர் நோக்கியுள்ளார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட பதில் அதிபர்களுக்கான நிவாரண நடவடிக்கையை தொடர்பில் தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு அவர்களை மீளவும் பதிற்கடமையில் நியமிக்குமாறும் வேண்டுகிறோம். மனிதாபிமான ரீதியிலும் உங்கள் தீர்மானம் அமையுமென நம்புகிறோம்.
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக 2017 மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலையில் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருக்கும் அதிபர்களுக்கு பாடசாலை வகைப்பாட்டை பொருத்து 2500,4000, 6000.ஆகிய தொகைகள வழங்கப்படுகிறது. அக் கொடுப்பனவு கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் கடமையாற்றும் பதில் அதிபர்களுக்கும் வழங்கப்படுகிறது. இவ் விடயம் தொடர்பாக மத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் கோரிக்கையை வைத்துள்ளோம்.

வட மாகாணத்தில் பணி புரியும், பணி புரிந்த பதில் அதிபர்களுக்கும் இக் கொடுப்பனவை சம்பள பட்டியலுடன் இணைக்குமாறும், 2017 மார்ச் மாதம் தொடக்கம் நிலுவையிலுள்ள தொகையையும் இவ் பதில்.அதிபர்களுக்கு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பதில் அதிபர்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் இருக்கிறது என்பதோடு பிரதமர் மற்றும் ஏனைய மாகாண நிர்வாகங்கள் பதில் அதிபர்களுக்கு பாதிப்பில்லாத தீர்மானத்தை எடுக்கும் உடன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள்,
பிரதமரும் கல்வி அமைச்சருமான
ஹரினி அமரசூரிய , பிரதிக் கல்வி அமைச்சர் மதுர செனவிரட்ண, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர், அகில இலங்கை பதில் அதிபர் சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சசிகரன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.