;
Athirady Tamil News

யேமன்: ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 2 பேர் பலி!

0

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நேற்று (மார்ச் 25) அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தலைநகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியும் அவர்களது கப்பல்களை முடக்கியும் வருகின்றனர். இதனால், யேமன் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலானது 10வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், யேமனில் எந்தெந்த பகுதிகளின் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாத சூழலில் இந்த தாக்குதல்களின் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை தகர்த்து அவர்களின் முக்கிய தலைவரை கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல்களினால் அவர்களது ஆயுத தொழிற்சாலைகள், தொலைத் தொடர்பு முனைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் டிரோன் உற்பத்தி வசதிகளையும் தகர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் சனாவின் மேற்கு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதல்கள் அனைத்தும் சதா நகரத்தின் மீதும் ஹொதைதா மற்றும் மரிப் மாகாணங்களின் மீதும் நடத்தப்பட்டதாக ஹவுதி படையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட விடியோவில் அமெரிக்காவின் தாக்குதல்களினால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து சேதாரமாகி அப்பகுதி முழுவதும் ரத்தக்கறைகள் நிரம்பியுள்ளது பதிவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரையில் 100க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஏவுகணைகளின் மூலமாகவும் டிரோன்கள் மூலமாகவும் ஹவுதிகள் தாக்கியுள்ளன. இதில், 2 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு 4 பேர் பலியானார்கள்.

காஸாவினுள் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் முடக்கியதைக் கண்டித்து இஸ்ரேலின் வணிகக் கப்பல்கள் முடக்கப்படும் என ஹவுதி படைகள் எச்சரித்திருந்தன.

இதனால், கடந்த மார்ச் 15 அன்று அமெரிக்க ராணுவம் யேமனின் மீதான தனது வான்வழித் தாக்குதலை தொடர்ந்தது. மேலு, தாக்குதல்கள் துவங்கிய அன்றே 53 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.