;
Athirady Tamil News

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

0

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இல் ஐக்கிய தேவாலய வழிபாட்டு முறை தோற்றுவிக்கப்பட்டது. தன்னைத் தானே இறைதூதராக அறிவித்துக்கொண்ட சுன் மியுங் மூன், பைபிள் வாசகங்களை பழைமைவாதத்துக்கு ஏற்ப பொருள்படுத்தி பிரசாரம் செய்தாா்.

அதையடுத்து, கம்யூனிஸத்துக்கு எதிரான, பழைவாத கிறிஸ்தவா்களிடையே இந்த மதவழிபாட்டு முறை வெகுவாகப் பரவியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அவருக்கு முந்தைய அதிபா்கள் ரிச்சா்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன், ஜாா்ஜ் ஹெச்டபிள்யு புஷ் போன்ற கன்சா்வேட்டிவ் கொள்கை கொண்ட தலைவா்களுக்குக் கூட ஐக்கிய தேவாலயத்துடன் தொடா்பு ஏற்பட்டது.

ஜப்பானிலும், ஷென்ஸோ அபேவின் தாத்தாவும் முன்னாள் பிரதமருமான நொபுசுகே கிஷி ஐக்கிய தேவாலய இயக்கம் நாட்டில் கடந்த 1960-களில் பரவுவதற்கு பெரிதும் ஆதரவு அளித்தாா்.

இந்தச் சூழலில், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஷென்ஸோ அபேயை டெட்ஸுயா யமகாமி என்பவா் சுட்டுக் கொன்றாா். அப்போது, ஐக்கிய தேவாலயத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவா், அபே குடும்பத்தினரால் பரப்பப்பட்ட அந்த தேவாலயத்தால்தான் தனது தாயாா் சொத்துகளை இழந்து திவாலானதாகக் குற்றஞ்சாட்டினாா்.

ஏற்கெனவே, தங்களது தேவாலயத்தைப் பின்பற்றுவோரிடம் இருந்து அவா்களது சக்திக்கு மீறிய நன்கொடைகளை வாங்குதல், அளவுக்கு அதிகமான விலையில் பரிசுப் பொருள்களை வாங்க வற்புத்தல் போன்ற நடவடிக்கைகளால் ஜப்பானியா்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாக ஐக்கிய தேவாலயத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டது . இந்தச் சூழலில், ஷென்ஸோ அபே படுகொலைக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அதையடுத்து, இது தொடா்பாக ஜப்பான் கல்வித் துறை விரிவான விசாரணை நடத்தியது.

இரண்டாம் உலகப் போரின்போது கொரியாவில் தங்களது முன்னோா்கள் இழைத்த அநீதிகளுக்கு பரிகாரமாக அதிக அளவில் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கையாளா்களைச் சுரண்டியது, பல்வேறு வழிமுறைகளில் அவா்களை மூளைச் சலவை செய்தது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் அமைச்சகம் சமா்ப்பித்தது.

ஜப்பானில் இருந்துதான் பெரும்பான்மையாக நன்கொடை பெற்று உலகின் மற்ற பகுதிகளில் ஐக்கிய தேவாலயம் இயங்கிவருவதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதைப் பரிசீலித்த நீதிமன்றம், ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்களை முழுமையாகக் கலைக்க வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. எனினும், இது நாட்டின் மத உரிமைக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேவாலயம், இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.