இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2009 உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் முப்படை தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.
இது தவிர, இதே குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்து, பின்னர் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி நாடாளுமன்ற உறுப்பினரான வினாயகமூர்த்தி முரளீதரன் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்த நான்கு பேரும் இனி பிரிட்டனுக்கு வர முடியாது; அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.