பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (26.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றியமேலதிக அரசாங்க அதிபர், எமது சமுதாயமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறது எனவும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் தாய், தந்தை, பேரன், பேர்த்தி போன்ற குடும்ப அங்கத்தவர்களின் கண்காணிப்பு, காத்திரமான பாதுகாப்பு மற்றும் அன்பான கட்டளை இருந்ததால் சிறந்த குடும்பம் இருந்தது எனவும், தற்போது கூட்டுக்குடும்பம் வாழ்க்கை முறையில்லாமலிருப்பதும், குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்ததுடன், இதற்கு தொழில்நுட்ப அதீத பாவனையும் கூட காரணமாக அமைந்துள்ளதாவும், எமது பண்பாடுகள் மற்றும் கலாசாரத்தினைவிட்டு நாம் விலகிச் செல்வதும் இதற்கு காரணமாக அமைவதாகவும் தெரிவித்தார். மேலும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான இவ் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் மூலம் சமுதாயத்தில் நடக்கும் பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான கருத்தினையும் அதற்கான 1938,1929 இலக்க உதவித் தொலைபேசி சேவைகளையும் அறிந்து கொள்ளவும் ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உதவும் எனத் தெரிவித்தார்.
இச் செயலமர்வானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாகவும், பால்நிலை வன்முறைகள் மற்றும் பாதுகாப்பு, சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்பாகவும் மற்றும் பால்நிலை வன்முறைகள், குடும்ப வன்முறை மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வளவாளர்கள் கருத்துரைகள் வழங்கினார்கள். இச் செயலமர்வில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ரி. திலீபன், சட்டப் பீடத் தலைவர் திருமதி கோசலை மதன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர் திரு. ரி. ஜெகானந்தன் மற்றும் மாவட்ட உளவள உத்தியோகத்தர் திரு. பி. கோபி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எம். ஏ. பி. மஞ்சரி, உளவளத் துணை உத்தியோகத்தர் எஸ். விஜயகுமார, அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி. ஜெகானந்தன் ஆகியோர் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.