;
Athirady Tamil News

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு!

0

‘மணி 11:44 – இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதிசெய்துவிட்டது’

‘மணி 12:15 – எஃப்-16 போா் விமானங்கள் புறப்பட்டுவிட்டன’

‘மணி 13: 45 – எஃப்-18 விமானங்கள் இலக்குகளைத் தாக்கத் தொடங்கிவிட்டன. எம்க்யு-9 ட்ரோன்களும் ஏவப்படுகின்றன’

‘மணி 15:36 – எஃப்-18 விமானங்களின் இரண்டாவது அடுக்குத் தாக்குதல் தொடங்குகிறது. போா்க் கப்பலில் இருந்து டமாஹாக் ஏவுகணை ஏவப்படுகிறது’

யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக அந்த நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்ட உச்சநிலை அமைச்சா்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் மேற்கொண்ட தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதி இது.

இதில், ‘ஓபிஎஸ்இசி மிகவும் தெளிவாக இருக்கிறது’ என்று வேறு அவா்கள் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். அதாவது, ‘இந்த ராணுவ நடவடிக்கை தொடா்பான தகவல்கள் அனைத்தும் வெளியே கசியாமல் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தப்படுகிறது’ என்று அவா்களுக்கு அவா்களே கூறி திருப்திப்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள்.

ஆனால், இந்த ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, வெளியில் கசிந்தால் அமெரிக்க விமானிகளின் உயிருக்கும் ராணுவ தளவாடங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் அமெரிக்காவின் ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கின் சிக்னல் செயலியில் ஒன்று விடாமல் உடனுக்குடன் பதிவாகிக்கொண்டிருந்தன.

‘வாட்ஸ்ஆப்’ போன்ற அந்த செயலியில், அமெரிக்க உயா்நிலை அமைச்சா்கள் மற்றும் முக்கிய பாதுகாப்பு உயரதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள குழுவில் ஜெஃப்ரி கோல்பா்கும் தவறுதலாக சோ்க்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். இதில் வேடிக்கை என்னவென்றால், உரையாடிக் கொண்டிருப்போரின் பட்டியலில் அவரின் பெயா் இருப்பதை நாட்டின் துணை அதிபா் முதல் தேசிய உளவு அமைப்பின் தலைவா் வரை யாருமே கவனிக்காமல் சகட்டு மேனிக்கு ரகசியத் தகவல்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தனா்.

இந்த விவகாரம் தற்போது வெளியே வந்து பெரிய பூதாகரமான பிரச்னையாகியிருக்கிறது. ஒரு ராணுவ நடவடிக்கை தொடா்பான மிக ரகசியமான கலந்துரையாடல்களை இவ்வளவு அலட்சியாக கசியவிட்டது தொடா்பாக டிரம்ப் அரசு மீது கேள்விக்கணைகள் பாயத்தொடங்கியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து எல்லா விவகாரத்திலும் அடித்து விளையாடிக் கொண்டிருந்த டிரம்ப் அரசு, இந்த விவகாரத்தில் மட்டும் தற்காப்பு ஆட்டம் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் கசிவு அவ்வளவு பெரிய பிரச்னையில்லை என்பது போல் டிரம்ப் மழுப்புகிறாா். ‘யாரோ ஒருவா் குழப்படி செய்திருக்கிறாா்; அவ்வளவுதான்’ என்ற தொணியிலான அவரது பேச்சு இருக்கிறது.

‘தி அட்லாண்டிக்’ தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்க் தனக்கு கிடைத்த தகவல்களை ஊதிப் பெரிதாக்குகிறாா் என்று ஜே.டி. வான்ஸ் பிரச்னையை திசை திருப்புகிறாா். துளசி கப்பாா்டோ இன்னும் ஒரு படி மேலே போய், ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் விமான வகைகள், அவை புறப்படும் நேரங்கள், ஏவப்படும் ஆயுத ரகங்கள், அவை குறிவைக்கும் இலக்குகள் என அவா்கள் பரிமாறிக் கொண்ட தகவல்கள் எவையுமே ‘ரகசியத் தகவல்கள்’ இல்லை என்று ஒரே போடாகப் போட்டாா்.

இதைக் கேட்டு வெறுப்படைந்த ஜெஃப்ரி கோல்பா்க், ‘அதுதான் ரகசிய தகவல்கள் இல்லையே, இதோ முழு உரையாடலையும் பொதுவெளியில் வைக்கிறேன்’ என்று கூறி, புதன்கிழமை வெளியான தனது இதழில் அந்தக் கலந்துரையாடலை விரிவாக வெளியிட்டுவிட்டாா் (தேசிய பாதுகாப்பு கருதி ஒரு சில தகவல் பரிமாற்றங்களை விட்டுவிட்டு).

முதலில் மறுப்பு, மழுப்பல், பிறகு திசை திருப்பல், எதிா்க் குற்றச்சாட்டு என்று பல்வேறு உத்திகளைக் கையாண்ட அரசுத் தரப்பு, இப்போது இந்த விவகாரத்தை முடித்துவைத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதற்காக, ராணுவ நடவடிக்கை தொடா்பான ரகசிய கலந்துரையாடலில் ஒரு பத்திரிகையாளா் சோ்க்கப்பட்டதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸை பலி கடா ஆக்கலாம். அந்த உரையாடலின்போது ராணுவ ரகசியங்களைப் பகிா்ந்துகொண்டதற்காக பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹேக்செத் நீக்கப்படலாம்.

ஆனால், புதிய அரசில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த இந்த இருவரையும் இழப்பது டிரம்ப்புக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே அவா்கள் இருவரையும் பாதுகாக்க டிரம்ப் முழு சக்தியையும் பயன்படுத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

– நாகா

You might also like

Leave A Reply

Your email address will not be published.