;
Athirady Tamil News

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

0

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்த மார்ச் 21 அன்று கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் மெட்வெடோவ், நராத், பகா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து துனாஜ்ஸ்கா ஸ்த்ரேதா மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கும் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதினால் ஸ்லோவாக்கியா அரசு நேற்று (மார்ச் 25) அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது.

இந்த தொற்றைக் கட்டுப்படுத்த அண்டை நாடான செக் குடியரசு கடந்த வாரம் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்து இரு நாடுகளைக் கடக்கும் நான்கு முக்கிய எல்லைப் பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து கால்நடைகள் இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வேகமாக பரவி வரும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக செக் குடியரசின் 16 தீயணைப்புப் படை வீரர்கள் ஸ்லோவாக்கியா நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செக் குடியரசின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரி கூறுகையில், அவசரக் கால நடவடிக்கையாக செக் தீயணைப்பு வீரர்கள் ஸ்லோவாக்கிய அதிகாரிகளுக்கு கோமாரி நோய் தொற்றைக் கட்டுப்படுத்த உதவுவார்கள் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கோமாரி நோயானது ஆடு, மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளை அவற்றின் சுவாசக்காற்றின் வழியாகத் தாக்கும் எனவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்மை, அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வாய் மற்றும் கால்கள் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் உண்டாகும் எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செக் குடியரசு நாட்டில் கோமாரி நோயானது கடந்த 1975 ஆம் ஆண்டில் தான் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.