பணயக்கைதிகள் சவப்பெட்டிகளில் திரும்புவார்கள்… இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்தால், பணயக்கைதிகளை வலுக்கட்டாயமாக மீட்க முயற்சித்தால் அவர்கள் கொல்லப்படலாம் என்று ஹமாஸ் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வலுக்கட்டாயமாக மீட்டெடுக்க
இஸ்ரேலின் பணயக்கைதிகளை உயிருடன் வைத்திருக்கவே முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், ஆனால் இஸ்ரேலின் முறையற்ற குண்டுவீச்சு அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ஹமாஸ் படைகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தரப்பு தனது கைதிகளை வலுக்கட்டாயமாக மீட்டெடுக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், அது அவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு செல்வதிலேயே முடிகிறது.
கடந்த வாரம் நெரிசல் மிகுந்த காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து தரைவழி நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. இச்சம்பவமானது ஜனவரி மாதம் ஹமாஸ் படைகளுடனான போர்நிறுத்தத்தால் ஏற்பட்ட அமைதியை சிதைப்பதாகவே பார்க்கப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதிலிருந்து, சிறார்கள், பெண்கள் என குறைந்தது 830 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், காஸா நிலப்பரப்பின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் பார்வை திரும்பியதன் பின்னரே என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.
காஸா மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், அப்பகுதியை கண்கவரும் ஒரு நகரமாக மாற்றப் போவதாகவும், போருக்கு பின்னர் இஸ்ரேல் கண்டிப்பாக அப்பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறி வருகிறார்.
அரசியல் காரணங்களுக்காகவே
இதனையடுத்து, ட்ரம்பின் கோரிக்கையை நிறைவேற்ற இஸ்ரேல் நடவடிக்கை முன்னெடுக்கும் என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் காஸா தொடர்பான ட்ரம்பின் கருத்துக்கு அரபு நாடுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாக தமது விருப்பத்தை அறிவித்ததன் பின்னரே, அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
மேலும், காஸா மீதான போர் தொடங்கியதில் இருந்தே பெஞ்சமின் நெதன்யாகு நிர்வாகத்திற்கு பணயக்கைதிகள் மீது எந்த அக்கறையும் இருந்ததில்லை என்றும், வெறும் அரசியல் காரணங்களுக்காகவே பெஞ்சமின் நெதன்யாகு காஸா மீதான போரை முன்னெடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இஸ்ரேல் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் திகதி முதல் இதுவரை இஸ்ரேல் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.