ஆயிரம் நெல்லிமரங்கள் நடுகை செய்யும் திட்டம் ஆரம்பம்

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கும் முயற்சியில், யாழ்ப்பாண மருத்துவ சங்கம் மற்றும் இணுவில் மெக்லியாட் மருத்துவமனை இணைந்து 2025 ம் ஆண்டு பசுமை திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த முக்கியமான முயற்சி, சுற்றுச்சூழலின் சமநிலையை மேம்படுத்த மருத்துவ, பல்பயன்பாடுள்ள ஆயிரம் நெல்லிமரங்கள் நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேற்று(26) யாழ் மருத்துவ பீட மாணவர் நலநோன்பு வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன், யாழ்ப்பாண மருத்துவ சங்க உறுப்பினர்கள், மெக்லியாட் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சியில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாணம் மருத்துவ சங்க உறுப்பினரும், மெக்லியாட் மருத்துவமனையின் பணிப்பாளருமான வைத்தியர் பா.சயந்தன் சிறப்பான முறையில் நெறிப்படுத்தியிருந்தார்.