போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி: என்ன கூறியுள்ளார்?

ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து, யாராவது ஒரு உலகத் தலைவர் போர்ப்பதற்றத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
உக்ரைன் ரஷ்ய ஊடுருவலாகத் துவங்கிய விவகாரம், இன்று உலக நாடுகளை இரண்டு அணிகளாக நிறுத்தியுள்ளது.
யார் எப்போது பிரச்சினையை உருவாக்குவார்களோ, எப்போது போர் வெடிக்குமோ என்ற அச்சத்திலேயே உலக மக்கள் வாழும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
பதற்றத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி
அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு புடின் உக்ரைனைத் தாக்குவாரானால், உக்ரைனில் அமைதியை நிலை நிறுத்துவதற்காக அனுப்பப்படும் ஐரோப்பிய படை, புடின் படைகளைத் திருப்பித் தாக்கவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மேக்ரானும் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் சந்தித்துப் பேசிய நிலையில்தான் மேக்ரான் இவாறு கூறியுள்ளார்.
இன்று, பிரித்தானியா உட்பட 31 நாடுகளின் தலைவர்கள் பாரீஸில் கூடி எலிசி மாளிகையில் உக்ரைன் விவகாரம் தொடர்பில் விவாதிக்க இருக்கிறார்கள்.
ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அளிப்பது அமெரிக்காவுக்கு விருப்பமற்ற விடயம் என அமெரிக்க தரப்பில் கசிந்த ரகசிய தகவல்கள் உறுதி செய்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஐரோப்பிய நாடுகள், தங்கள் பாதுகாப்பு குறித்த விடயங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.
ஆக, பாரீஸில் நடைபெறும் உக்ரைன் தொடர்பான சந்திப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.
இந்நிலையில்தான், ஐரோப்பிய அமைதிப்படை உக்ரைனில் நிலைநிறுத்தப்படும் நிலையில், மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் தங்கள் தலைமையின் முடிவின்படி பதில் தாக்குதல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
மொத்தத்தில், உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது!