தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்…போராடும் வீரர்கள்!

தென் கொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்புப் படையினர் போராடி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் வீசும் பலத்த காற்றினால் கடந்த மார்ச் 21 அன்று துவங்கிய காட்டுத் தீயானது பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பரவி வருகின்றது.
இந்தத் தீயை அணைக்க அந்நாட்டு அரசு ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்களைப் பணியமர்த்தியதுடன், நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏராளமான உபகரணங்களைப் பயன்படுத்தி போராடி வருகின்றனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்நிலையில், இந்தக் காட்டுத் தீயினால் பலியானோரது எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 37,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டுள்ளது.
உய்சோங் மலைப்பகுதியில் இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதன் விமானி பரிதாபமாகப் பலியானார்.
மேலும், தற்போது பலியானவர்களைப் பற்றிய தகவல் முழுமையாக வெளியிடப்படாத நிலையில் அதில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் காட்டுத் தீ பரவியபோது உடனடியாக தப்பிக்க இயலாமலும் சிலர் அங்கிருந்து வெளியேற மறுத்தவர்களும்தான் எனக் கூறப்பட்டுள்ளது.
வரலாறு காணாத காட்டுத் தீயில் அழிந்த ‘வரலாறுகள்’
தென் கொரியாவின் வரலாற்றில் மிகவும் மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டு தீயினால் 88,980 ஏக்கர் அளவிலான நிலம் எரிந்து நாசமானதுடன் யுனெஸ்கோ மற்றும் தென் கொரியா அரசினால் வரலாற்று சிறப்புமிக்கதாக அறிவிக்கப்பட்ட தளங்கள் உள்பட 300-க்கும் அதிகமான கட்டடங்கள் அழிந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், உய்சோங் நகரத்திலுள்ள 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌன்ஸா கோயில் வளாகத்திலுள்ள 20 முதல் 30 கட்டடங்கள் மற்றும் அரசினால் ‘புதையல்கள்’ எனக் குறிப்பிடப்பட்ட 1668 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரங்கம் வடிவிலான கட்டடம் உள்ளிட்டவை முற்றிலும் அழிந்துள்ளன.
கை கொடுக்குமா இயற்கை?
இந்தக் காட்டுத் தீ பரவி வரும் இடங்களில் இன்று (மார்ச் 27) பிற்பகுதியில் மழைப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவ்வாறு நிகழ்ந்தாலும் 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவு மழையே பெய்யக்கூடும் என்றும் அது காட்டுத் தீயை அணைக்க உதவாது என கொரியா வனத்துறை தலைமை அதிகாரி லிம் சாங்-சியோப் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,
நேற்று (மார்ச் 27) காலை நிலவரப்படி இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 9,000-க்கும் மேற்பட்டோர் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு உதவியாக 120 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாக தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன், நேற்று காலை தீயில் அதிகம் பாதிக்கப்பட்ட சியோங்சோங் நகரத்தின் ஜுவாங் மலைப்பகுதியில் அடர்த்தியான புகை மூட்டங்கள் உண்டான நிலையில் உடனடியாக ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த தீ அணைக்கப்பட்டது.
இந்தக் காட்டுத் தீ உருவானதற்கான காரணம் என்னவென்று கண்டறியப்படாத நிலையில் அப்பகுதி வாசிகள் தங்களது குடும்பக் கல்லறையின் மீது வளர்ந்த புற்களை அகற்ற கொளுத்திய தீயினாலோ அல்லது வெல்டிங் பணியின்போது வெளியான தீப்பொறிகளின் மூலமாவோ பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.