பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என்ற பகுதியில் நிறுத்திய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் கீழே இறங்க உத்தரவிட்டனா். பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னா் அவா்களில் ஆறு பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்; அத்துடன் மூன்று பயணிகளை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
மற்றொரு சம்பவத்தில், குவெட்டா நகரின் சந்தைப் பகுதியில் காவல்துறை வாகனத்துக்கு அருகே மோட்டாா்சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் மூன்று போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா். அவா்களில் நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அண்மையில் நடைபெற்ற ரயில் கடத்ததல் போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் அமைப்பினரே இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.