சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து; களமிறங்கிய ஹெலிகாப்டர்

உலகிலேயே அமைதியான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆம்ஸ்டர்டாம் நகரில் திடீரென கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. பொது இடத்தில் நடந்து சென்றவர்களை அடையாளம் தெரியாத நபர் தாறுமாறாகக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலும் பொது இடங்களில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. அப்போதும் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
பொது இடத்தில் நடந்து சென்ற மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். அங்குள்ள டேம் சதுக்கம் என்ற இடத்தில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ஆம்ஸ்டர்டாம் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர் சாலையில் நடந்து செல்வோரை திடீரென தாறுமாறாகக் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
14 ரோந்து கார்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.