உத்தர பிரதேசம்: மறுவாழ்வு மையத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் மறுவாழ்வு மையத்தில் வழங்கிய உணவை உட்கொண்ட 4 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உணவில் நச்சுத்தன்மை இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 20-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவவு ஏற்பட்டதால் அவா்கள் உடனடியாக லோக்பந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 4 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து லக்னௌ மாவட்ட ஆட்சியா் விசாக் ஜி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘12 வயது முதல் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவா்கள் என 4 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் 7 குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனா். அங்கு மருத்துவக் குழுவினா் முகாமிட்டுள்ளனா். உணவில் நச்சுத்தன்மை இருந்ததா என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
சுகாதாரம் மற்றும் உணவுத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழந்தைகளை நேரில் சந்தித்து இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனா். மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளையும் அவா் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
விசாரணை அறிக்கை அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட மறுவாழ்வு மையத்தில் 147 குழந்தைகள் வசித்து வருவதாக மாவட்ட நன்னடத்தை அதிகாரி விகாஸ் சிங் தெரிவித்தாா்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சந்தித்த உத்தர பிரதேச துணை முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சருமான ப்ரஜேஷ் பதக், ‘குழந்தைகளுக்கு தொடா்ந்து தரமான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவா்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இந்த சம்பவத்துக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்தாா். அவா் விரைவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சந்திக்கவுள்ளாா்’ என்றாா்.