கொழும்பில் வெடித்த போராட்டம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட 27 பேர்

சுகாதார அமைச்சிற்கு முன்பாக இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பேர் மருதானை (Maradana) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு (27.03.2025) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 27 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரச சேவை
இணை சுகாதார பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று (28.03.2025) முதல் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மருதானை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சிற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அந்த தடை இன்று மாலை (28.03.2025) வரை நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.