ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீஸ்(35). இவர் அலிகார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது
யூஸ் கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.500 – 600 வரை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 18 ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.
அந்த நோடீஸில், ரூ.7.79 கோடி வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். இதுகுறித்து ரஹீஸ் கூறுகையில்,
இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. வயதான பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் , ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி விதித்த சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.