சுவிட்சர்லாந்தை பரபரப்படையச் செய்த வெடிகுண்டு விவகாரம்: குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்

சுவிட்சர்லாந்தில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டு அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுவிஸ் மாகாணமொன்றை பரபரப்புக்குள்ளாக்கிய நபர்
ஜெனீவாவில், Patek Philippe என்னும் கைக்கடிகார நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லைகொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டன.
அந்த நிறுவனத்தை மிரட்டுவதற்காகவே இந்த பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
வெடிகுண்டுகளை அனுப்பிய நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், 61 வயதான அந்த நபர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயலும்போது பொலிசாரிடம் சிக்கினார்.
குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகத்துறையைச் சேர்ந்தவரான அந்த நபர், தான் பார்சல் வெடிகுண்டு அனுப்பியதையும், மிரட்டல் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், தான் வெடிகுண்டுகள் தயாரித்தையும் ஒப்புக்கொண்ட அவர், தான் தனியாகவே செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பண நெருக்கடியில் வாழும் அந்த நபரின் இந்த செயல்களின் பின்னணியில் பணம்தான் காரணமாக உள்ளது போல் தெரிகிறது.