;
Athirady Tamil News

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

0

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர்.

அதில், இந்தியாவில் இருந்து 3.31 லட்சம் மாணவர்களும். சீனாவில் இருந்து 2.77 லட்சம் மாணவர்களும் படிக்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், சமூக வலைதளங்களில் தேச விரோத (பாலஸ்தீன் – ஹமாஸ் ஆதரவு) கருத்துகளைப் பகிர்ந்து, லைக் செய்தவாகவும் அமெரிக்க அரசு குற்றச்சாட்டு வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களை நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

மேலும், தொடர்ந்து மாணவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைக் கண்காணித்து வரும் வெளியுறவுத் துறை அமைச்சகம், இனிவரும் காலங்களில் புதிதாக விசா பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைக் கண்காணித்து விசா வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, ஹமாஸ் ஆதரவு மாணவர்கள் அதிகம் உள்ள கல்வி நிறுவனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கொண்டுவந்த திட்டத்தின்படி காஸா போருக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கையைத் தடை செய்யவும், கல்வி விசாவை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

’ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்களைக் காரணமாக வைத்து மொத்த பல்கலைக்கழகத்தையும் தடை செய்யும் போக்கு மிகவும் ஆபத்தானது’ என தனிநபர் உரிமைகள் மற்றும் வெளிப்பாடு ஆதரவு அறக்கட்டளை (ஃபயர்) தெரிவித்துள்ளது.

”இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளோம். டிரம்ப் நிர்வாகம் தினமும் இதுபோன்ற பைத்தியக்காரர்களைத் தேடி வருகிறது” என வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசா கடந்த மார்ச் 14 அன்று ரத்து செய்யப்பட்டு அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.