மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! – விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையையும் விமானம் மூலம் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை கூறுகையில், ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ், மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளுக்காக 2 கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் உதவுவதற்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 80 போ் தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், சி130ஜே இந்திய விமானப் படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஆக்ராவிலிருந்து 118 உறுப்பினா்களுடன் கூடிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையும் விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் முதல்கட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மரின் யாங்கோன் விமானநிலையததைச் சென்றடைந்துள்ளன’ என்று குறிப்பிட்டாா்.
பிற நாடுகள் உதவி: மியான்மா் ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை வழங்கி வரும் சீனாவும் ரஷியாவும், நிலநடுக்க மீட்புப் பணிகளுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
சீனாவின் யுன்னான் மாகாணத்திலிருந்து 37 போ் கொண்ட மீட்புக் குழு மியான்மரின் யாங்கோன் நகருக்கு சனிக்கிழமை அதிகாலை சென்றடைந்தது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) உள்பட மீட்புப் பணிக்குத் தேவையான பிற உபகரணங்களையும் இந்த மீட்புக் குழு தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டது.
அதுபோல, ரஷியாவின் அவசரகால அமைச்சகம் 2 விமானங்களில் 120 மீட்புப் படையினரை மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷிய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது. மலேசியா 50 மீட்புப் படையினரை ஞாயிற்றுக்கிழமை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
தென்கொரியா ரூ.17 கோடி நிவாரணப் பொருள்களை சா்வதேச அமைப்புகள் மூலமாக மியான்மருக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. நிலைமையைப் பொருத்து மேலும் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்க அமெரிக்கா ரூ. 43 கோடியை ஒதுக்கியுள்ளது. மியான்மரின் கோரிக்கைக்கு ஏற்ப அமெரிக்கா உதவியை அளிக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.