வேத சிவாகமப் பேராசான்- சிவஸ்ரீ தானு மகாதேவக்குருக்கள் அவர்களின் மறைவு சைவஉலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

சிவாச்சாரியப் பெருமகனாருக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்த உயர் பேராளன். வேத சிவாகமப் பேராசான்- சிவஸ்ரீ தானு மகாதேவக்குருக்கள் திருவோணத்துடன் கூடிய ஏகாதசி திதியில் 25.03.2025 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்திருக்கிறார்.
இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவாகம கலாநிதி சிவஶ்ரீ தானு மஹாதேவ குருக்கள் ஐயா அவர்கள்
கற்பதிலும் கற்ப்பிப்பதிலும் தேடுவதிலும் பிறரை தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதிலும் உயர் பண்பாளனாக விளங்கியவர்.
தனக்கென்று ஓரு குரு பரம்பரையை உருவாக்கியுள்ளார். எப்போதும் தம் மாணவனின் உயர்வில் அக்கறை உள்ள ஒரு ஆச்சார்யராக விளங்கியவர்.
சிவபூமியாகிய சைவத்தமிழ் மண்ணில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வேத சிவாகம குருகுலத்தை அவர் நடாத்தியிருக்கிறார்
சைவஉலகம் போற்றிய ஐயாவின் பணியின் பயன் அனைவரும் அறிவர்.
ஐயாவின் புலமைக்கு சான்றாக உயர் கௌரவமாக இந்தியாவின் தமிழகத்து தருமை ஆதீனம், சிவபுரம் பாடசாலை போன்ற ஆன்மீகம்சார் நிறுவனங்களின் கௌரவிப்பு கிடைத்திருக்கின்றமை குறிப்படத்தக்கது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சார்யார் அவருக்கான கௌரவிப்பில் இணைய வழியில் நேரே இணைந்து ஆசிவழங்கி வழங்கிகௌரவித்தமை உயர்சிறப்பிற்குரியது.
குருகுல மரபில் ஒரு பெரும் மாணவ பரம்பரையை உருவாக்கி சைவப்பணியாற்றி மறைந்திருக்கிறார்.
வேதஆகம சாஸ்திர சம்ஸ்கிருத புலமையாளாக விளங்கியவர். அத்துடன் கலைகளில் ஆர்வமும் இரசனையும் கலைஞர்களை ஊக்குவித்து ஆசீர்வதிப்பதிலும் உயர் பெருமகனாக விளங்கினார்.
ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்.ஐயாவின் ஆத்மா எப்போதும் எம்மை ஆசீர்வதிக்கட்டும்!!
ஐயா அவர்களின் ஆத்மா பார்பதி சமேத பரமேஸ்வரப்பெருமானின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்பதும். ஐயாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பண்டிதர் செஞ்சொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன்
செயலாளர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்.