;
Athirady Tamil News

அனலைதீவு மக்கள் ஒற்றுமையாக – ஓரணியாக இருக்கவேண்டும்

0

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்க மறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள மருத்துவ அதிகாரி நுவனி உண்மையில் பாராட்டுக்குரியவர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மருத்துவ அதிகாரி நுவனியை பாராட்டினார்.

அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதார சேவை அறிமுக நிகழ்வும் அனலைதீவு பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மருத்துவர் விடுதியை திறந்து வைத்த ஆளுநர், மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் ஆளுநர் தனது உரையாற்றுகையில்,

நெடுந்தீவு பிரதேசத்துக்கு இந்த மாதம் ஆரம்பத்தில் நாம் நடமாடும் சேவைக்குச் சென்றிருந்தோம். தீவகப் பிரதேசங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்து வருகின்றோம்.

நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தின் தீவகத்தின் 4 இறங்குதுறைகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன்.

நெடுந்தீவு இறங்குதுறை பகுதியளவிலும், நயினாதீவு மற்றும் எழுவைதீவு இறங்குதுறைகள் முழுமையாகவும் புனரமைக்கப்பட்டிருந்தன.

அனலைதீவு இறங்குதுறையை புனரமைக்க திட்டமிட்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அப்போது அது நடைபெறவில்லை. அனலைதீவு இறங்குதுறையை எமது முன்னுரிமைப்பட்டியலில் சேர்த்துள்ளோம். விரைவில் அதனைப் புனரமைத்து தருவோம்.

இந்த அரசாங்கம் உள்ளூர் வீதிகளை புனரமைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகின்றது. வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் 1,500 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை அரசாங்கம் புனரமைக்கவுள்ளது.

அதற்காக இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தேவையின் முன்னுரிமை அடிப்படையில் அதனைச் செய்யவுள்ளோம்.

பேருந்துப் பிரச்சினை தொடர்பில் நாம் அறிவோம். இந்தக் கூட்டத்தில் நீங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்னராகவே, அரசாங்கம் யாழ்ப்பாணத்துக்கு வழங்கவுள்ள புதிய பேருந்துகளை நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவுகளுக்கு வழங்கவேண்டும் என கேட்டுள்ளோம்.

உங்கள் பிரதேச மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியின் சேவை அர்ப்பணிப்பானது. அவர் தனது வரவேற்புரையில்கூட, இந்தப் பிரதேச மக்களை தனது பெற்றோராக, சகோதரராக கருதுகின்றார் என்பதைச் சொன்னார்.

அவருக்கு உங்களின் அன்பு பிடித்திருக்கின்றது. அவர் இங்கு வந்து தமிழ் மொழியில் உரையாடுகின்றார். உண்மையில் அவரது சேவையை நாங்கள் மெச்சுகின்றோம். கடற்படைத்தளபதிகூட தனது உரையில், இவரைப்போல 5 மருத்துவர்கள் இருந்தால் தீவகத்தின் மருத்துவப் பிரச்சினை தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டதையும் நினைவுகூர்கின்றேன்.

கடற்படையினர் இந்தக் கட்டடத்தை புனரமைத்தமைக்கு நன்றி கூறுகின்றேன். தீவகப் பகுதிகளின் இறங்குதுறைகளின் புனரமைக்காக இருக்கலாம், அரசாங்க கட்டடங்களின் புனரமைப்பாக இருக்கலாம் பெரும்பாலும் எங்ளுக்கு கடற்படையினர் உதவுகின்றனர். அதேபோன்று இடர்நேரத்திலும் அவர்கள்தான் எமது மக்களுக்கு கைகொடுக்கின்றனர்.

உங்கள் பிரதேசத்துக்கான நோயாளர் காவு வண்டி படகுச்சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என நம்புகின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பிரதேசம் தொடர்பான சில கவலைகள் எனக்கிருக்கின்றன. உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலர் கூட தனது உரையில் அதைச் சொல்லியிருந்தார். நீங்கள் ஒற்றுமையாக ஒரே கோட்டில் இல்லை.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அம்மா ஒருவர் என்னை வந்து சந்தித்தார். தான் சிறு வயது முதல் வழிபட்ட ஆலயம் பூட்டப்பட்டிருக்கின்றது என்று சொல்லி அழுதார். உங்களின் முரண்பாடுகளால் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கின்றமை வேதனையாக இருக்கின்றது. இது சிறிய தீவு. இங்குள்ள நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் சமரம் செய்துகொள்ளவேண்டும். ஒற்றுமையாக இருப்பதுதான் பலம். ஒற்றுமையாக இருந்து கோயில்களை மீளவும் திறவுங்கள்.

இந்த மக்களுக்கு சமூசசேவைகளை ஒன்றாகச் செய்யுங்கள். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்களுக்கும் இந்தப் பிரதேசத்துக்கு அபிவிருத்தி செய்வதற்கு மனவிருப்பம் இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் ஒற்றுமையாக – ஓரணியாக இருக்கவேண்டும் என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் கருணாதுங்க, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் சுசீந்திரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈ.தயாரூபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.