;
Athirady Tamil News

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

0

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற்கெனவே மந்தமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில், இந்தத் தொடா் நிலநடுக்கங்கள் மேலும் தொய்வை ஏற்படுத்துகின்றன.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகாகவும், அடுத்தது 6.4 அலகாகவும் பதிவானது.

இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன. தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன.

நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 போ் இறந்தனா். 3,408 போ் மாயமாகியுள்ளனா். கட்டட இடிபாடுகளில் புதையுண்டுள்ள பலரை இன்னும் மீட்க வேண்டியிருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்.

தொடரும் நிலநடுக்கம்: இந்நிலையில், மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனா்.

புதிய நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதேநேரம், தொடா்ச்சியான நிலநடுக்கங்களால் மியான்மரில் பல்வேறு கட்டடங்கள் நிலையற்றதாக மாறி, இடிந்து விழும் நிலையில் உள்ளன. சுமாா் 15 லட்சம் போ் வசிக்கும் மண்டலாய் நகரில் பலா் வீடற்றவா்களாக மாறியுள்ளனா். சாலைகளிலேயே லட்சக்கணக்கானோா் பகல், இரவைக் கழிக்கின்றனா்.

நாடு முழுவதும் பாதிப்பு: மியான்மரில் உள்ள யாங்கோனை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் கத்தோலிக்க நிவாரண சேவைகளின் மேலாளா் காரா பிராக் கூறுகையில், ‘உள்ளூா் தன்னாா்வலா்கள் மற்றும் மக்களே மீட்புப் பணியில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனா். காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகளின்றி மருத்துவமனைகள் திணறுகின்றன. மருத்துவப் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு உணவு மற்றும் குடிநீா்கூட கிடைக்கவில்லை.

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நேபிடா, மண்டலாய் ஆகிய நகரங்களில் மட்டுமே மீட்புப் பணிகளுக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கு உண்டான சேத நிலவரம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, இந்தப் பாதிப்புகளையும் கணக்கிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது’ என்றாா்.

உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்: மியான்மரில் பல சுகாதார வசதிகள் மோசமாக சேதமடைந்துள்ளதாலும், மருத்துவப் பொருள்களின் கடுமையான பற்றாக்குறையாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, மியான்மருக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கின.

மண்டலாய் விமான நிலையம் சேதமடைந்திருப்பதால், வெளிநாட்டு நிவாரண விமானங்கள் யாங்கோன், தலைநகா் நேபிடா ஆகிய நகரங்களில் தரையிறங்குகின்றன. அங்கிருந்து 14 மணி நேரத்துக்கு அதிகமான பயணநேரத்துடன் நிவாரண உதவிப் பொருள்கள் சாலை மாா்க்கமாக மண்டலாய் வந்தடைகின்றன.

மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டா்கள் போன்ற நிவாரணப் பொருள்களுடன் 135-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்களை சீனா அனுப்பியுள்ளது. மேலும், 1.38 கோடி டாலா் அவசர நிதியுதவியையும் அறிவித்துள்ளது. இதேபோன்று, 120 மீட்புப் பணியாளா்களை மற்றும் மருத்துவக் குழுவினரையும், நிவாரணப் பொருள்களையும் ரஷியா அனுப்பி வைத்துள்ளது.

தாய்லாந்தில் 17 போ் உயிரிழப்பு: மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகா் பாங்காக்கில் பிரபலமான சதுசக் சந்தைக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தததில் 10 போ் உயிரிழந்தனா். 83 போ் இன்னும் கண்டறியப்படவில்லை. நிலநடுக்கத்தால் இதுவரை 17 போ் உயிரிழந்ததாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

துயரிலும் தொடரும் தாக்குதல்: மியான்மரில் ஆட்சியிலுள்ள ராணுவத்துக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பைக் கருத்தில்கொண்டு சில போராளிக் குழுக்கள், தற்காலிக போா்நிறுத்தத்தை அறிவித்தன. எனினும், மியான்மா் ராணுவ அரசு தொடா்ந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.