பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) பகல் 12 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நேற்று (மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்காக்கில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 30 மாடிகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் கட்டடம் நிலநடுக்கத்தால் சேதமடைந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்த பணியாளர்களில் 83 பேர் என்னவானார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றும், அவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.