;
Athirady Tamil News

குண்டு வீசுவோம்… மத்திய கிழக்கு நாடு மீது பகிரங்க மிரட்டல் விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்

0

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

குண்டுவீச்சு உறுதி
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாகவும், ஆனால் விரிவாகக் கூற விரும்பவில்லை என்று செய்தி ஊடகம் ஒன்றில் தொலைபேசி வாயிலாக நடந்த நேர்காணலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு முன்வராவிட்டால், குண்டுவீச்சு உறுதி என்றே ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வராவிட்டால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தது போல் இரண்டாம் நிலை வரிகளை விதிப்பேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-21 வரையான தனது முதல் பதவிக்காலத்தில், ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை ட்ரம்ப் விலக்கிக் கொண்டார்,

பொதுமக்கள் நலன்கருதி
இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகள் நீக்கத்திற்கு ஈடாக ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்தது. ட்ரம்ப் மீண்டும் கடுமையான தடைகளை விதித்தார்.

அதன் பின்னர் ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை அதிகரிப்பதில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை மிக அதிகமாக மீறியுள்ளது. இதனிடையே, ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் இதுவரை நிராகரித்து வந்துள்ளது.

மட்டுமின்றி, ஒப்பந்தம் தொடர்பில் ஈரானுக்கு ட்ரம்ப் அனுப்பிய கடிதம் குறித்து ஈரான் ஓமன் வழியாக பதில் அனுப்பியது. மேலும், தங்களது அணுசக்தி திட்டம் என்பது முழுக்க முழுக்க பொதுமக்கள் நலன்கருதி எரிசக்தி நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.