;
Athirady Tamil News

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

0

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது.

ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், சமீப ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாகவும் பாகிஸ்தான் மாறியுள்ளது.

அமைதி ஆய்வுக்கான பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரமலான் மாதத்தில் 84 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் 26 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தலிபான்கள் 2022ஆம் ஆண்டு அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். ஆனால், பலூசிஸ்தான் விடுதலை அமைப்பினர் பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த இரு அமைப்புகளுமே பாகிஸ்தானில் வன்முறை அதிகரிக்க, அமைதியின்மை நிலவக் காரணமாகியுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் மார்ச் 11ஆம் தேதி பயணிகள் ரயில் சிறைப்பிடிக்கப்பட்டதில், 25 பேர் கொல்லப்பட்டனர். ரமலான் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் 61 தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

2025 மார்ச் 2 முதல் 20ஆம் தேதி வரையிலான 20 நாள்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக 56 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான பாகிஸ்தான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அப்துல்லா கான் இது குறித்துப் பேசியதாவது,

”பல்வேறு குழுக்களால் பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பலூச் அமைப்பினர் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹபீஸ் குல் பகதூர் அமைப்பு பலூச் அமைப்பை விடக் கொடியது. அரசுடனான தாக்குதலில் இவர்களிடையே மோதல் ஏற்படுவதுண்டு” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ”சில தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் – இ – இஸ்லாம், கைபர் கனவாய் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் (தலிபான் ஆட்சி) இதுபோன்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்பதே பாகிஸ்தானின் நீண்டநாள் குற்றச்சாட்டாக உள்ளது.

தொடர் தாக்குதலால் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பகத்தன்மையில் விரிசலை அதிகரித்துள்ளது. அரசுக்கு மக்கள் ஆதரவு திரும்பக் கிடைக்க வேண்டியது அவசியமானது. அரசின் முதல் கேடயம் பொதுமக்கள்தான்” எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.