;
Athirady Tamil News

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

0

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்தார். ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதனை அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று ஒரு நேர்காணலில் பேசிய டிரம்ப், “இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும். இதுவரை அவர்கள் பார்த்திராத வகையில் இந்தத் தாக்குதல் இருக்கும்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் மீது வரி விதித்ததைப் போல மீண்டும் இரண்டாம் தர வரிகள் விதிக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசியபோது, “நாங்கள் பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. அமெரிக்கா வாக்குறுதிகளை மீறியதே எங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் தனது ஏவுகணைகளைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர்கள் பாதாள அறையில் ஏவுகணைகளை வைத்திருக்கும் விடியோவை வெளியிட்டிருந்தனர்.

ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் அந்த இடம் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், அங்கு தரையில் இஸ்ரேலியக் கொடி வரையப்பட்டு வீரர்கள் அதன்மேல் நிற்பதைப் போல காட்சிகள் வெளியாகின.

இந்த நிலையில், ஈரான் முழுவதும் சுரங்கப் பகுதிகளில் ஏவுகணைகளை தாக்குதல் நடத்துவதற்கு தயாராக வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியானது உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.