;
Athirady Tamil News

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

0

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆப்கன் அகதிகள் தாங்களாகவே முன்வந்து சொந்த நாட்டுக்குத் திரும்ப திங்கள்கிழமை (மாா்ச் 31) வரை கெடு விதிக்கப்பட்டது. அந்தக் கெடு முடிவடைந்த பிறகும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறாதவா்களைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (ஏப். 1) தொடங்குவதாக இருந்தது. இருந்தாலும், ஈகைப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஏப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் அகதிகள் மீண்டும் பாகிஸ்தானுக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

இது குறித்து அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கன் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடா்பான முடிவெடுக்கும் குழுவில் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஒரு அதிகாரி கூட இடம் பெற மாட்டாா். இந்த ஆண்டுக்குள் அனைத்து அகதிகளையும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கடந்த 2023 அக்டோபரில் உத்தரவிட்டது. அதன்படி, சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக இந்த மாதம் தகவல் வெளியானது.

இந்தச் சூழலில், உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக இந்த மாதம் தகவல் வெளியானது.

தறபோது பாகிஸ்தானில் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகள் வசிப்பதாகவும் அவா்களில் 13,44,87 போ் பதிவுச் சான்று பெற்றுள்ளா்; 8,07,402 போ் ஆப்கன் குடியுரிமைச் சான்று வைத்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இது தவிர, உரிய ஆவணங்கள் இன்றி சுமாா் 10 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவா்கள் நாட்டில் வசிப்பதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

இந்தச் சூழலில், 30 லட்சம் அகதிகளை இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.