வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவசர தேவைக்குரிய விண்ணப்பங்களை நேரடியாக ஒப்படைக்குமாறும், எதிர்காலத்தில் இதனை நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள், வரைபடங்களுடன் உள்ளூராட்சிமன்றங்கள் தயாராக இருந்தால் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தால் விரைவாக ஆதனமதிப்பீடு மேற்கொள்ள முடியும் என விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் விரைவாக சோலைவரி மீளாய்வை நிறைவு செய்யவேண்டும் எனவும், சோலைவரி உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்கான கட்டணங்களை பொதுமக்கள் வீடுகளிலிருந்தே செலுத்துவதற்குரிய இணைய மேம்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தினார்.