சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இவர் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியை சேர்ந்த சரஸ்வதி மற்றும் சாய்தே என அழைக்கப்படும் ரேணுகா என அடையாளம் கண்டனர்.
ரேணுகா, மாவோயிஸ்ட் அமைப்பின் வலிமை வாய்ந்த பிரிவான சிறப்பு மண்டலக்குழுவின் உறுப்பினராக இருந்து வந்தார். இவரைப் பற்றிய தகவலுக்கு போலீஸார் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து இன்சாஸ் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் இதுவரை பாதுகாப்பு படைகளால் 135 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 119 பேர் தண்டேவாடா, பீஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை கொண்ட பஸ்தார் பிராந்தியத்தில் கொல்லப்பட்டனர்.
பஸ்தார் பிராந்தியதின் சுக்மா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இருவேறு என்கவுன்ட்டர்களில் 11 பெண்கள் உட்பட 18 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு முன் கடந்த 20-ம் தேதி பஸ்தார் பிராந்தியத்தின் பீஜப்பூர், கான்கெர் ஆகிய மாவட்டங்களில் 30 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டனர்.