உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) பி.ப.03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்கள் கடமைகளில் குழுக்களின் செயற்பாடுகள் திறமையாகவும், சிறப்பாகவும் இருந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்து, எமது மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் அவர்களை வரவேற்பதாகவும், இடமாற்றம் பெற்றுச் சென்ற உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் அவர்களுக்கும் தங்கள் அனைவரின் சார்பிலும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை விடவும் மேன்மேலும் வினைத்திறனாக செயற்படுவது தொடர்பாக ஒவ்வொரு குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முழுமையாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வட்டாரங்களில் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கொண்ணுதல் முறைமைகள் போன்றவை தொடர்பாகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.