;
Athirady Tamil News

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

0

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:

நிலநடுக்க பாதிப்புகள் காரணமாக உயிரிழந்த 2,719 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 4,521 போ் காயமடைந்துள்ளனா்; 441 பேரைக் காணவில்லை என்றாா் அவா்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 72 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் புதையுண்டவா்களை உயிருடன் மீட்பதா்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணா்கள் தெரிவித்தனா். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டா் அளவுகோலில் முறையே 7.7 அலகாகவும் 6.4 அலகாகவும் பதிவான இந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன; தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன.

அங்கு நிவாரணப் பணிகளில் உலக நாடுகளின் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். மியான்மருக்கு அண்டை நாடான தாய்லாந்தில் இந்த நிலநடுக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு 17 போ் உயிரிழந்தனா்.

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்சிப்படுத்தும் ‘காா்டோசாட்-3’ செயற்கைக்கோள் படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் இணையசேவை இல்லாததால், அங்கு ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில், இஸ்ரோ செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மண்டலாய், தலைநகா் நேபிடா, சகாயிங் ஆகிய நகரங்களின் மாா்ச் 18-ஆம் தேதி புகைப்படம் மற்றும் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய மாா்ச் 29-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மண்டலாய் நகரின் முக்கிய அடையாளங்களான பௌத்த மதக் கோயில்கள், பல்கலைக்கழகம், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் இன்வா நகருக்கு அருகிலுள்ள ஐராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அவா பாலமும் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.