பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கிய 2000-க்கும் அதிகமானோர் பரிதாமாக உயிரிழந்தனர். இந்தச் சோகத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்களை ஜப்பான் நாடு தெரிவித்திருக்கிறது.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இந்த பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகவும் வாய்ப்புள்ளது என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அளவுக்கு இந்தப் பொருளாதார சேதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதங்களைவிட 214.2 டிரில்லியன் யென் அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஜப்பானில் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8 முதல் 9 வரையிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேற்கண்ட நிலநடுக்க எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருவேளை நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளிலிருந்து சுமார் 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், அவர்களில் 2.98 லட்சம் மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியாக வாய்ப்புமுள்ளது.
முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டில் ரிக்டர் அளவுகோலில் 9-ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அணுஉலை வெடிவிபத்தில் 15,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.