;
Athirady Tamil News

3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

0

அமெரிக்க அதிபராக தன்னை 3-ஆவது முறையாகவும் தேர்ந்தெடுக்க அமெரிக்க குடிமக்கள் விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு 3-ஆவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது சாத்தியமா?

அமெரிக்க நாட்டு அரசமைப்பின் 22-ஆவது சாசனப் பிரிவின் படி, ’எந்தவொரு நபரும் அமெரிக்க அதிபர் பதவிக்கு 2 முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கெனவே இருமுறை வகித்த ஒருவர், மூன்றாவது முறை போட்டியிட வேண்டுமெனில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அரசமைப்பு சாசனப்பிரிவில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமெனில், ஆளுங்கட்சிக்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். இல்லையெனில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் 2 பங்கினரின் ஆதரவு இந்த சட்டத்திருத்தத்துக்கு இருக்க வேண்டும். ஆனால், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சிக்கு அத்தனை பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லை.

எனினும், டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராவதற்கு இன்னொரு வழியும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதன்படி, அவர் அடுத்த தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றால், அதன்பின், அப்போதைய அதிபராக பதவிவகிப்பவர் தமது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ராஜிநாமா செய்துவிட்டாரெனில், துணை அதிபர்(டிரம்ப்) அதிபராக பதவி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இதற்கெல்லாம் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே… ஏனெனில், 12-ஆவது சாசனப்பிரிவின் படி, எவரொருவர் அதிபர் பதவிக்கு மீண்டும், அதாவது 3-ஆவது முறையாக போட்டியிட முடியாதோ அதேபோல, அவர் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட தகுதியற்றவராகிவிடுகிறார் என்பதை தெளிவாக்குகிறது.

தற்போது 78 வயதாகும் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும்போது, அவருக்கு 82 வயதாகிவிடும். இதன்மூலம், அமெரிக வரலாற்றில் முதுமையான அதிபர் என்கிற பெருமை டிரம்ப்புக்கு போய் சேரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.