;
Athirady Tamil News

மியான்மரில் போர் நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

0

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மியான்மர் நாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ இந்தியா சார்பில் என்டிஆர்எஃப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள வீரர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியதாக மியான்மர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் 4 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கடந்த 2020-ல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் மோசமானதால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மியான்மரில் ஆளும் ராணுவ அரசு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு எதிராக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

“நாடு முழுவதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கும் மீட்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தி மக்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் தற்காலிகமாக போர்நிறுத்தம் செய்யப்படுகிறது. இது, ஏப்ரல் 22 வரை நீடிக்கும்” என்று அரசு இன்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.