;
Athirady Tamil News

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

0

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 3,643-ஐக் கடந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மியான்மர் மற்றும் துருக்கியைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், தலைநகர் நேபிடாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 26 வயதுடைய ஒருவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் ராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் காரணமாக உயிரிழந்த 3,000 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 4,500 போ் காயமடைந்துள்ளனா்; 441 பேரைக் காணவில்லை எனவும், காணாமல் போனவர்களில், பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டு நீண்ட நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் புதையுண்டவா்களை உயிருடன் மீட்பதா்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் கூறியுள்ளார்.

மியான்மரில் 2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டா் அளவுகோலில் முறையே 7.7 அலகாகவும் 6.4 அலகாகவும் பதிவான இந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன; தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன.

அங்கு நிவாரணப் பணிகளில் உலக நாடுகளின் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். மியான்மருக்கு அண்டை நாடான தாய்லாந்தில் இந்த நிலநடுக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு 17 போ் உயிரிழந்தனா்.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் இன்வா நகருக்கு அருகிலுள்ள ஐராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அவா பாலமும் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழைக்கு முன்னதாக நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு மனிதாபிமான அமைப்புகள் மற்ற நாடுகளை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தேசிய துக்க நாள் அறிவித்துள்ளது ராணுவ ஆட்சிக்குழு. மேலும், உயிரிழப்பு மற்றும் சேதங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.