உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 15 வயது சிறுமியும், வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளுடைய கிழக்கு ஆசிய மேலாதிக்கவாதி என அறியப்படும் 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை நேற்று (ஏப்.2) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமிதான் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண் மற்றும் 2வது இளம் வயதுடையவர் எனக் கூறப்படுகின்றது.
மேலும், கடந்த 2024 டிசம்பரில் தனது வன்முறையைத் தூண்டும் வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளினால் கைது செய்யப்பட்ட நிக் லீ ஸிங் கியூ (வயது 18) என்பவருடன் இணையவழியில் தொடர்பிலிருந்தவர் என அடையாளம் காணப்பட்டு தற்போது 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான அந்தச் சிறுவன் சிங்கப்பூரிலுள்ள மசூதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுவன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூரின் மாரோஃப் மசூதியிலிருந்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே சண்முகம் இன்று (ஏப்.2) ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ’’தீவிரவாத மற்றும் பிரிவினைவாதக் கொள்கைகளுடையவர்கள் பிறரைக் கொலை செய்யக்கூடும். எனவே, இதுபோன்ற வழக்குகள் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.