யாழில். கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,
கிராம அபிவிருத்தித் திட்டங்களில் வறுமை என்ற விடயத்தில் வருமானத்தை மட்டுமே நாம் நோக்குவதாகவும் தற்போது கல்வி, சுகாதாரம் வாழ்க்கைத் தரம் போன்ற பல்பரிமாணங்கள் வறுமை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படுவதாகவும், பாடசாலையில் மாணவர்கள் வரவு மற்றும் இடைவிலகல்கள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு வறுமைக் கிராமங்கள் தெரிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கும் போது வினைத்திறனுடனும் விவேகத்துடன் தயாரிக்க வேண்டியுள்ளதாகவும், எதிர்கால அபிவிருத்தித் தேவை கருதி தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், திட்டங்களை தயாரிக்கும் போது ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.
கிராமிய அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது சகல பிரதேச செயலாளர்களும் வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியதுடன் திட்டங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் பல்பரிமாண வறுமையை குறைக்கும் நோக்கில் வருமானத்தை உறுதிப்படுத்தல், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி, ஏனைய பொது வசதிகளை அடைதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிராம அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதே இப் பயிற்சிப் பட்டறையின் நோக்காகும் எனவும் தெரிவித்தார்.
கிராம அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் அவர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இப் பயிற்சிப் பட்டறையில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்திப்பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலக துறை சாா்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.