கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் : மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தல் தொடர்பில் ஆராய்வு !

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்(03.04.2025) வியாழக்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் :
கடந்த கால யுத்த அசாதாரண நிலைகளினால் எமது மாவட்டத்தில் காணிப் பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன. காணிப் பிணக்குகள் மற்றும் காணி ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்காக தினமும் அதிகளவான மக்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
மக்களது அன்றாட தேவைகளுக்காக காணி ஆவணங்கள் சகலருக்கும் முக்கியமானது. அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு காணிகள் அடையாளப்படுத்தி வழங்க வேண்டியுள்ளது. பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு கூட்டங்களில் இவை தொடர்பில் சரியாக ஆராயப்பட வேண்டும். இங்கு கொள்கை ரீதியாக மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலும் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக பிரதேச செயலர் ரீதியாக காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்களின் பங்கேற்புடன் நடமாடும் சேவைகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகிறோம். மக்களது காணி ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சகலரும் பூரண பங்களிப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில், மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டன.
இதன்போது நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட வேண்டிய வியாபார நிலையங்கள், பிரதேச சபைக்கு பாரப்படுத்த வேண்டியவை, நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல், காணிக் கச்சேரி முன்மொழிவிற்கான அனுமதி வழங்குதல், காணி ஆவணம் இல்லாதவர்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான அனுமதி உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்றைய கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஒரு காணிக் கோரிக்கையும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 26 காணிக் கோரிக்கைகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 37 காணிக் கோரிக்கைகளுமாக மொத்தமாக 64 காணிக் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன. மேலும் 64 காணிக் கோரிக்கைகளும் சிபாரிசு செய்யப்பட்டன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதை தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.