உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்

வடபகுதி உற்பத்தியாளர்களின் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதற்கான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (04.04.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அபிவிருத்தியினை மேம்படுத்தலாம் எனவும், சம்மேளனத்தின் ஒத்துழைப்பினை பெற்று சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், இச் செயற்பாடு வடக்கு தெற்கிற்கான வியாபார வகையாக அமைந்திருந்தாலும் ஒரு வகையில் நல்லிணக்கச் செயற்பாடாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு, இன்றைய நிகழ்வினை உள்ளூர் உற்பத்தியாளர்கள் நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனம் வட பகுதி உற்பத்தியாளர்களின் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையில் அவர்களது பொருட்கள் சேவைகளை விருத்தி செய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் உற்பத்தியாளர்களின் பொருட்களை ஏற்றுமதி சந்தைக்கு ஏற்ற தொடர்புகளை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும், இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு ஆளுநர் செயலகம், வடமகாண பிரதம பிரதமர் செயலாளர் அலுவலகம், போன்றவற்றின் வழிகாட்டலும் அந்தத் துறை சார்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது.
இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபை மாகாண பணிப்பாளர், இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரி, தலைவர் மற்றும் சம்மேளன அங்கத்தவர்கள், தொழிற்துறை மாகாண பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள், வடபகுதி சம்மேளனத் தலைவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.